பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு 5 நாட்களே உள்ளநிலையில், பிரதமர் மோடி அங்கு கடந்த 1-ந் தேதி முதல் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் நேற்று சித்ரதுர்கா, விஜயாப்புரா ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் குணத்தை பாருங்கள். யாருடைய ஜெயந்தியை கொண்டாட வேண்டும்?. தலைமுறை தலைமுறையாக யாரிடம் இருந்து நல்ல விஷயங்களை கற்றோமோ, நாம் யாரை வழிகாட்டியாக பின்பற்றுகிறோமோ அவர்களின் ஜெயந்தியை கொண்டாட வேண்டும். சித்ரதுர்காவை கடைசியாக ஆண்ட மடகரி நாயக், வீரமடகரி, ஒனக்கே ஒபவ்வா ஆகியோரை இந்த அரசு மறந்துவிட்டது. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக திப்பு ஜெயந்தியை இந்த அரசு கொண்டாடுகிறது.
மடகரி நாயக்கின் படையில் தளபதியாக பணியாற்றியவரின் மனைவியான தலித் சமூகத்தை சேர்ந்த ஒனக்கே ஒபவ்வாவை இந்த அரசு மறந்துவிட்டது. ஹைதர் அலியின் ராணுவ படையால் ஒனக்கே ஒபவ்வா கொல்லப்பட்டார்.
இப்படித்தான் இந்த நிலத்தின் மண்ணின் மைந்தர்களின் தியாகத்தை, துணிச்சலை இந்த காங்கிரஸ் கட்சி அழித்துவிட்டது. இதை கர்நாடக மக்கள் மறக்கக்கூடாது. காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் நலனுக்காக பெரிய தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டது. பொய்யான தகவல்களை வெளியிட்டு தலித் மக்களை காங்கிரஸ் திசை திருப்புகிறது.
தேசபக்தியை சோனியா காந்தியும், அவருடைய மகன் ராகுல் காந்தியும் தங்களின் மூத்தவர்களிடம் இருந்து கற்கவில்லை.
அண்டை நாட்டிற்கு சென்று நமது ராணுவத்தினர் துல்லிய தாக்குதலில் ஈடுபட்டனர். அதற்கு ஆதாரத்தை கேட்டு நமது ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்துவிட்டது. நாட்டை துண்டாட விரும்புபவர்களுடன் காங்கிரஸ் கைகோர்த்து உள்ளது. 2014-ம் ஆண்டு காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை.
தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நாங்கள் ஜனாதிபதி பதவியில் அமர்த்தியுள்ளோம். ஏழை தாயின் மகனான நான் பிரதமராக இருக்கிறேன். இதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால் தலித் மக்களின் நலன் பற்றி பேச காங்கிரசுக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கையால்தான் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதை தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சாதிகள் இடையே சண்டையை ஏற்படுத்தவும், கர்நாடகத்தை பிரிக்கவும் இந்த காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது. இதனை அனுமதிக்க மாட்டோம்.
ஜவுளி பூங்காவை இந்த பாகல்கோட்டையில் அமைப்பதாக காங்கிரஸ் சொன்னது. ஆனால் அதை நிறைவேற்றவில்லை. அதனால் சித்தராமையா இந்த மாவட்டத்திற்கு வந்தால் விரட்டியடியுங்கள். இந்த மாவட்டத்தில் போட்டியிடும் முதல்-மந்திரியை தோற்கடிக்க செய்யுங்கள். பா.ஜனதாவை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு மோடி பேசினார்.