திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த மே 29ந்தேதி தொடங்கி தொடர்ந்து பெய்து வருகின்றது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 564 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கேரளாவின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று ரெயில் தண்டவாளங்களில் நீர் சூழ்ந்து சிக்னல் அமைப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்னம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு கனமழையினால் கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வடைந்து உள்ளது.
இவற்றில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளன. இவற்றினை தொடர்ந்து இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவை உள்ளன.
கடந்த மே 29ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு 116 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஜூலை 9ந்தேதியில் இருந்து 2வது முறையாக பெய்ய தொடங்கிய கனமழைக்கு 39 பேர் பலியாகி உள்ளனர்.
கனமழையால் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கேரள அரசு நிவாரண பணிகளுக்கு ரூ.113.19 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் உதவியையும் கோரியுள்ளது.