பனாஜி,
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கோவா மாநில முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து கோவா திரும்பியதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோவா மாநிலத்தில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது டெல்லி, மும்பை, மற்றும் கோவா-பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 31-ந் தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. அவரை பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.