புதுடெல்லி,
விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன்பின்னர் விவசாயிகள், அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு செவிசாய்க்காமல் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது. இதனையடுத்து விவசாயிகள், மத்திய அரசின் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பற்றி தங்களுக்குள் கலந்துரையாடல் நடத்தினார்கள். அதில் சில விவசாய அமைப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரலாம் என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி இன்று விவசாயிகள் மீண்டும் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பின்னர், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றிய ஒருமித்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். இதுபற்றி ஸ்வராஜ் இந்தியா விவசாய அமைப்பின் தலைவர் யோகேந்திரா கூறும்பொழுது, மத்திய அரசுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக வரும் 29ந்தேதி காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டுள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதற்கான நடைமுறைகளை செயல்படுத்துவது ஆகிய 2 விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதேபோன்று கிரந்திகாரி கிசான் அமைப்பு தலைவர் தர்சன் பால் கூறும்பொழுது, பஞ்சாப் மற்றும் அரியானா சுங்க சாவடிகள் நிரந்தரம் ஆக திறந்து இருக்கும். வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் என கூறினார்.