லக்னோ
வட மாநிலங்களில் தீபாவளி 5 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதன் முதல்நாளான நேற்று முன்தினம் தந்தேரஸ் எனும் பெயரில் உலோகப் பொருட்கள் வாங்கும் நாளானது. இதில் அனைவரும் கட்டாயமாக தம் வீடுகளுக்கு ஏதாவது ஒரு உலோகப் பொருள் வாங்குவது வழக்கமாக உள்ளது. இதில், தங்கம் மற்றும் வாகனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இரண்டாவது நாளான நேற்று சின்ன தீபாவளி கொண்டாடப்படுகிறது. இது லஷ்மி தங்கள் வீடுகளுக்கு வரும் நாளாகக் கருதப்படுகிறது.
மூன்றாவது நாள் முக்கியமாகப் பெரிய தீபாவளி எனக் கொண்டாடுகின்றனர். இதில், புத்தாடைகள் உடுத்தி, பூஜைக்கு பின் பட்டாசுகளை வெடித்து பொது மக்கள் உற்சாகம் அடைகின்றனர். நான்காவது நாள், கோவர்தன் பூஜை செய்யப்படுகிறது. இதில், பசுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். கடைசியாக ஐந்தாவது நாள், பைய்யா தோஜ் என கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரனை அவர்களது சகோதரிகள் தேடிச் சென்று சந்திக்கின்றனர்.
உத்தரப்பிரதேசம் அயோத்தியின் ராமர் கோவிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த வருடம் இங்குசுமார் ஏழு லட்சம் ஒளிவிளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த வருடம் அதேநாளில், அயோத்தி முழுவதிலும் சுமார் ஒன்பது லட்சம் ஒளிரும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
இன்று மாலை 4.45 மணிக்கு அனைத்து ஒளிவிளக்குகளும் ஏற்றும் பணி தெடங்கும். இவை அயோத்தியின் சரயு நதியிலுள்ள 32 கரைகளிலும் தீப உற்சவமாகக் காணப்பட உள்ளன. சுமார் 40 நிமிடங்களில் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு என அனைத்தும் ஒரே சமயத்தில் ஒளிர உள்ளன. பாஜக ஆளும் அரசால் செய்யப்படும் இந்நிகழ்வு, உலக சாதனை படைக்கிறது. இதன்மூலம், தனது சாதனையை இன்று தானே முறியடிக்கிறது அயோத்தி.
இதற்காக, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் அவரது அமைச்சக அதிகாரிகள் குழு ஒரு வாரமாக முற்றுகையிட்டு பணியாற்றி வருகிறது. இவர்களுடன் சுமார் 20,000 தன்னார்வத் தொண்டர்களும் கொண்டாட்டப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேநாளில், அயோத்தியின் பல இடங்களில் லேசர் விளக்குகளால் ஆன ஒளிப்படக் காட்சிகள் ராமாயணத்தை விளக்கும் வகையில் இடம் பெறுகிறது. முன்னதாக, ராமரின் புகழை நினைவு கூரும் வகையில் ஊர்வல அணிவகுப்பும் நடைபெற உள்ளது.
இவற்றை கண்டுகளிக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து பொதுமக்கள் குவிந்துள்ளனர். வியட்நாம்,கென்யா உள்ளிட்ட ஐந்து நாடுகளிலிருந்தும் சுமார் 10 ஆயிரம் விருந்தினர்கள் அரசு சார்பில்அழைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் யோகி தலைமையில் நடைபெறும் விழாவில் மத்தியச் சுற்றுலாத்துறை இணை மந்திரி ஜி.கிஷண் ரெட்டி முக்கிய விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.