புதுடெல்லி,
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் மிகப்பெரும் அரசியல் திருப்பமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மறுநாளே பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.
நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கடும் அதிருப்தி அடைந்தார். எதிர் கருத்துக்களை கூறி வந்த அவரை மாநிலங்களவை கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சி பதவியையும் நிதிஷ் குமார் பறித்தார். இதையடுத்து நிதிஷ் குமாருக்கு எதிராக அணி திரட்டி வந்த சரத் யாதவ், தேர்தல் கமிஷனில் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு அளித்தார்.
அதில், 'கட்சியின் பெரும்பாலான தேசிய நிர்வாகிகள், எங்களிடம் உள்ளதால், நாங்கள் தான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என அறிவிக்க வேண்டும். கட்சியின் சின்னமான அம்பு சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இதேபோல் நிதிஷ்குமார் அணியும் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்து, ஆதரவு உறுப்பினர்கள் கொண்ட பட்டியலையும் அளித்தது.இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக கூறி நிதிஷ் குமாருக்கு ஐக்கிய ஜனதா தள சின்னமான அம்பு சின்னத்தை அண்மையில் வழங்கியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக, டெல்லி நீதிமன்றத்தில் சரத்யாதவ் அணி மனு தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் குஜராத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ சோதுபாய் வஸ்வா என்பவர் இந்த மனுவை தொடுத்துள்ளார்.