புதுடெல்லி,
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் வெளிப்படையான முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான கொலிஜியம் முறை போன்ற ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி, அனூப் பரன்வால் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், மனுவை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.