புதுடெல்லி,
ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக-வுக்கு தோல்வி ஏற்பட்டதால், வரும் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மத்திய அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், புதுடில்லியில் இந்தியாவுக்கான நிதி வியூகம் என்ற நிகழ்ச்சியில் அறிக்கையை ரகுராம் ராஜன் வெளியிட்டார்.
இந்த அறிக்கையை ரகுராம் ராஜன் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 13 பொருளாதார நிபுணர்கள் தயாரித்துள்ளனர். வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ரகுராம் ராஜன்,
அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடன் தள்ளுபடியை தங்கள் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கக்கூடாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியாவது விவசாயிகள் கடன் தள்ளுபடியை தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களிலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி, தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பது போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
இந்த நடைமுறையை தடுக்கும்படி பலமுறை தேர்தல் ஆணையத்திடம் நேரிலும் கடிதம் வாயிலாகவும் வலியுறுத்தி உள்ளேன். விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசுவது நியாயம் தான். ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி உண்மையில் விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்குமா? ஏன் என்றால் விவசாயிகளில் ஒரு பிரிவினர் மட்டும் தான் கடன் பெறுகிறார்கள்.
விவசாயக் கடன் தள்ளுபடி மூலம் நாட்டின் பல கோடி விவசாயிகளுக்கு நேரடியாக பயன் கிடைக்கும் என்றாலும், கடன் தள்ளுபடியால் இந்திய பொருளாதாரத்தில் நெருக்கடிகளும் உருவாகும்.
கடன் தள்ளுபடி நடவடிக்கையால் அனைத்து தரப்பு விவசாயிகளும் பலனடைய போவதில்லை. கடன் தள்ளுபடி செய்வதால் மாநில அரசுகளின் நிதி நிலைமை மோசமாகும். முதலீடுகளை குறைக்கும்.
மேலும் இந்த நடவடிக்கை கடன் கலாச்சாரத்தை சீர்குலைக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். நமது விவசாயிகள் மிக சிறந்த தொழிலாளர்கள். விவசாயிகள் நம் நாட்டின் திறன் வாய்ந்த உந்து சக்தியாக விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.