பானஜி,
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கோவா மாநில முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர், கணைய நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் கோவா சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்தில், அவரை காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று மதியம் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது கோவா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் உடன் இருந்தார்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்த ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று மனோகர் பாரிக்கர் கூறினார் என தெரிவித்தார். கொச்சியில், தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றிய போது ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி பொய் கூறுவதாக மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்துள்ளார். ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ள மனோகர் பாரிக்கர் அதில் கூறியிருப்பதாவது:- உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சந்திப்பை பயன்படுத்திக்கொண்டீர்கள் என்பதை நினைக்கும்போது நான் வருத்தம் அடைகிறேன். என்னை சந்தித்த 5 நிமிடங்களில் ரபேல் குறித்து உங்களுடன் எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.