புதுடெல்லி,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பிரதமராக பதவி வகித்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங்கை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
டெல்லியில் உள்ள மன்மோகன் சிங் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், வரும் ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991-96 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக பதவி வகித்தவர். இந்தியாவில் பல பொருளாதார சீர்திருத்தங்களை அவரது பதவிக்காலத்தில் மேற்கொண்ட அவர், உலகவங்கி உள்ளிட்ட பல்வேறு நிதியமைப்புகளில் பணியாற்றிய சிறந்த பொருளாதார அறிஞர் ஆவார். இந்த சந்திப்பில் மத்திய பட்ஜெட் தயாரிப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.