தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு - கண்ணீர் பதிவுகள் வெளியிட்ட ராகுல், பிரியங்கா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி டுவிட்டரில் கண்ணீர் பதிவுகள் வெளியிட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். கொரோனா காரணமாக, நினைவு தினத்தன்று விளம்பரங்களை வெளியிடாமல் அதற்கு செலவிடும் பணத்தை புலம் பெயந்த தொழிலாளர்களுக்கு உதவ அந்த கட்சி பயன்படுத்தியது. இந்த நிலையில் தனது தந்தை ராஜீவ்காந்தி குறித்து அவருடைய மகனும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி, டுவிட்டரில் கண்ணீர் பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில், எனது பாசமிகு தந்தை இந்த நாளில்தான் நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்தார். அற்புதமானவர், மென்மையானவர், கனிவானவர், இரக்கமுள்ளவர், பொறுமைமிக்கவர். அவர், எப்போதும் எனது இதயத்திலும், உயிரிலும் அற்புதமான நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவர் இந்தியில் வெளியிட்ட மற்றொரு பதிவில், நான் உண்மையான தேசபக்தரின், முற்போக்கு சிந்தனை கொண்டவரின், பாசத்திற்கு உரியவரின் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன். பிரதமராக இருந்தபோது, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர் அவர். தன்னுடைய முற்போக்கு சிந்தனைகளுடன் நாட்டை அதிக அதிகாரம் கொண்டதாக மாற்றியவர். இன்று அவரது நினைவு நாளில் அவருக்கு பாசத்துடன், நன்றி உணர்வுடன் சல்யூட் அடிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரியங்கா காந்தியும் தனது தந்தையின் நினைவுகளை டுவிட்டரில் பகிர்ந்தார். அதில், அன்பு செலுத்தாதவர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். நியாயமற்றது என்று தெரிந்தாலும், நியாயம் என்று நினைத்து நடைபோடுவது, வானம் இருட்டாக இருந்தாலும், பயம் இருந்தாலும், புயல் இருந்தாலும் அஞ்சாமல் இருப்பது, வலுவான இதயத்துடன், சோகத்தை மறைத்து அன்புடன் இருப்பது, இதெல்லாமே எனது தந்தை வாழ்க்கையின் பொக்கிஷங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் தனது தந்தையுடன் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு