புதுடெல்லி,
அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.
தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக நிறைவேறியது.
இந்தநிலையில், இந்த சட்டத்துக்கு எதிராக ஜன்ஹித் அபியான் (பொதுநல பிரசாரம்), யூத் பார் ஈக்வாலிடி (சமத்துவத்துக்கான இளைஞர்கள்) உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.பாரதி, ஜி.கருணாநிதி உள்ளிட்டோர் தரப்பில் பொதுநல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடந்தபோது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் இந்த மனுக்கள் மீது பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.