புதுடெல்லி,
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், நஷ்டத்தில் தத்தளித்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளது.
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசு உறுதி கொண்டுள்ளது. ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், அதை குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். இதை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர் என கூறினார்.
அத்துடன், யார் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கினாலும், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வலுவான தனியார் துறை கொள்கைகளின்படி ஏர் இந்தியாவை நடத்த முடியும் என்று குறிப்பிட்டார். ஏர் இந்தியாவை நாங்கள் தனியார் மயமாக்கினாலும், அது இந்தியர்களின் கைகளில்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.