புதுடெல்லி,
விமான ஊழியர்களிடம் முறைகேடாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு எதிராக 3 மாதங்கள் முதல் 2 க்கும் மேலான ஆண்டுகள் வரை தடை விதிக்கும் புதிய விதிமுறைகளை இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா கூறியதாவது:-
விமான ஊழியர்களை திட்டினால் 3 மாதம் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும். விமான ஊழியர்களை தாக்கினால் 6 மாதம் தடை விதிக்கப்படும். ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுபவர்களுக்கு 2 வருடம் அல்லது அதற்கு மேல் பறக்க தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த புதிய விதிகள் வெளிநாட்டு பயணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பறப்பதற்கு விதிக்கப்படும் தடையானது கூடுதல் தண்டனை எனவும், குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக ஏற்கனவே இருக்கும் விதிப்படி, சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தனது டுவிட்டரில் விளக்கியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம், தனி நபர்களுக்கு தடை விதித்தால் அவர்களும் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.