புதுடெல்லி,
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, ஆமதாபாத் குல்பர்க் சொசைட்டியில் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர். இதை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், இதில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய முதல்-மந்திரி மோடி உள்ளிட்டோரை விடுவித்தது.
இதை எதிர்த்து இஷான் ஜாப்ரியின் மனைவி சகியா, குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் சகியா மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நேற்று இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.