தேசிய செய்திகள்

சித்தராமையாவுடன் எச்.விஸ்வநாத் திடீர் சந்திப்பு

சித்தராமையாவை பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி., எச்.விஸ்வநாத் திடீரென சந்தித்து இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

கட்சி தாவல்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் கர்நாடகத்தில் நிர்வாகிகள் கட்சி தாவல் தொடங்கியுள்ளது. பொதுவாக சட்டசபை தேர்தல் வரும்போது, உரிய பதவி கிடைக்காத நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு செல்வது வழக்கம். அதுபோல் தான் தற்போது கட்சி தாவல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

இந்த நிலையில் பா.ஜனதாவின் மூத்த தலைவரும், கர்நாடக மேல்-சபை உறுப்பினருமான அதாவது எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசினார். இருவரும் பரஸ்பரம் உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டனர். திடீரென நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசை விட்டு விலகியபோது, சித்தராமையா மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் சமீபகாலமாக எடியூரப்பா மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.

தனி மெஜாரிட்டி

கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தான் அவர் காங்கிரசை விட்டு விலகி தேவேகவுடா முன்னிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர் மைசூரு மாவட்டம் உன்சூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால், காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது மந்திரிசபையில் கட்சியின் மாநில தலைவராக இருந்தும், எச்.விஸ்வநாத்துக்கு இடம் அளிக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார்.

ஆபரேஷன் தாமரை

இந்த நிலையில் குமாரசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2019-ம் ஆண்டு கிளர்ந்து எழுந்தனர். எச்.விஸ்வநாத் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆபரேஷன் தாமரையின் கீழ் பா.ஜனதாவுக்கு தாவினர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்த அதே ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபையில் காலியாக இருந்த 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் உன்சூர் தொகுதியில் போட்டியிட்ட எச்.விஸ்வநாத் தோல்வி அடைந்தார். இதனால் மந்திரி ஆகலாம் என்ற கனவில் இருந்த அவருக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் தனக்கு பா.ஜனதா தலைவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, மந்திரி பதவி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தோல்வி அடைந்தவருக்கு மந்திரி பதவி வழங்க முடியாது என்று பா.ஜனதா கூறிவிட்டது. இதையடுத்து அவரை ஓரளவுக்காவது திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு எம்.எல்.சி. பதவியை எடியூரப்பா வழங்கினார்.

எதிர்ப்பு பிரசாரம்

அந்த பதவி வழங்கினாலும் அவ்வப்போது பா.ஜனதாவின் சில முடிவுகளை அவர் பகிரங்கமாகவே விமர்சித்து வந்தார். ஹிஜாப் விவகாரம், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இந்து அமைப்புகளின் எதிர்ப்பு பிரசாரம் போன்றவற்றில் அவர் அரசை விமர்சித்தார்.

இந்த நிலையில் எச்.விஸ்வநாத் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசி இருப்பதன் மூலம் அவா மீண்டும் காங்கிரசுக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரசில் நீண்ட காலம் எம்.பி.யாக இருந்த அவர், கர்நாடக மந்திரியாகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் காங்கிரசின் கொள்கை-கோட்பாடுகளால் அரசியலில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு