பெங்களூரு,
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட என்.மகேஷ் எம்.எல்.ஏ. நேற்று நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். இதில் பங்கேற்ற முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எந்த பகுதியில் செல்வாக்கு குறைவாக உள்ளதோ அங்கு நான் அதிக கவனம் செலுத்தி கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்வேன். அடுத்த சட்டசபை தேர்தலில் 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்க பாடுபடுவேன். பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவின் தத்துவங்களை ஏற்று வந்து கட்சியில் சேருகிறார்கள். இது நல்ல விஷயம்.
தலித் சமூகத்தினர் அதிகளவில் பா.ஜனதாவில் சேருகிறார்கள். தலித் மக்களுக்கு ஆதரவாக பா.ஜனதா உள்ளது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். பசவராஜ் பொம்மையின் மந்திரிசபையில் பெரும்பாலான சாதிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடங்க உள்ளேன்.
தலித் சமூகத்தை சேர்ந்த என்.மகேஷ் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். அவரது பின்னணி என்ன என்பதை பசவராஜ் பொம்மை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.