சிக்கமகளூரு;
மருத்துவ கல்லூரி
சிக்கமகளூருவுக்கு மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் வந்தார். அவர் அந்த பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும், வளர்ச்சிப் பணி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர் சிக்கமகளூரு அருகே உள்ள கதிரிமிதிரி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தை பார்வையிட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மருத்துவக் கல்லூரியில் தற்போது 150 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு இந்த ஆண்டு விஸ்வ வித்யாலயா கல்லூரியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ கல்லூரியில் நடந்த வரும் கட்டிட வேலைகள் தரமான முறையில் உள்ளது. இந்த கட்டிட பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செயலி
இதையடுத்து அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் தகவல்கள் அடங்கிய புதிய செல்போன் செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், 'சிக்கமகளூரு மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களாகிய முல்லையன்கிரி, பாபாபுடன்கிரி மலை, ஒரநாடு அன்னபூர்னேஸ்வரி கோவில், சிருங்கேரி சாராதா அம்மன் கோவில் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களின் விவரங்கள் இந்த செல்போன் செயலியில் உள்ளன. இந்த செல்போன் செயலி, சுற்றுலா பயனிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஹெப்பே அருவி
மேலும் இந்த செயலி மூலமே வாடகை வாகனங்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த செயலியில் புதிதாக சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள அருவிகளான உக்கடா அருவி, சிருமனே ஹெப்பே அருவி உட்பட பல்வேறு அருவிகளை சுற்றுலா பயணிகள் சென்று பார்ப்பதற்கான தகவல்களும் உள்ளது' என்று கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமேஷ் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரி மஞ்சுநாத் கலந்து கொண்டனர்.