லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாராயம் குடித்த 4 பேர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்கள் எந்த பகுதியில் சாராயம் வாங்கினார்கள் என விசாரணையை தொடங்கினர். அதில் அவர்கள் ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சாராயத்தை வாங்கியது தெரியவந்தது.
மேலும் ராணிகாஞ்ச் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பலர் அங்கிருந்து சாராயத்தை வாங்கிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே நேற்று மேலும் 9 பேர் இறந்தனர். இதனால் விஷ சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, 3 மகன்களும் அடங்குவர். மேலும் அந்த பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். மேலும் இதில் அரசியல் சதி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 48 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.