புதுடெல்லி,
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேவையான தகவல்களை பெறுவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை உருவாக்க உத்தரவிட வேண்டும் என பிரவாசி லீகல் செல் (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சட்ட மையம்) என்ற அமைப்பின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்ஜய் ஹெக்டே, டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களை தவிர மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை வெளிநாடுவாழ் இந்தியர்களும் பெறும்வகையில் இணையதளங்களை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதற்கு, மத்திய அரசு மற்றும் டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.