ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியாகவும், வெப்பமாகவும் இருந்தது என ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்முவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனவரி மாதத்தில் மிகக் குறைந்த சராசரி அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் ஸ்ரீநகரில் அதிகபட்ச வெப்பநிலை 11.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் மற்றும் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் பகுதிகளில் முறையே 5.7 டிகிரி செல்சியஸ் மற்றும் 16.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஸ்ரீநகரில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெறும் 3.0 மி.மீ. மழை அல்லது பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் 2018 ஜனவரியில் 1.2 மி.மீ. மழை அல்லது பனிப்பொழிவு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.