பாகல்கோட்டை,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை அருகே ஹொன்னகட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாகல்கோட்டை புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அந்த வீட்டில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வீட்டில் பதுக்கப்பட்ட 500 கிலோ வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பழைய பாகல்கோட்டையை சேர்ந்த விஜய்(வயது 30), மஞ்சுநாத்(30) என்பது தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை தயாரித்து கல்குவாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. கைதான 2 பேர் மீதும் பாகல்கோட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.