திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசேகன் என்பவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணியமர்த்த பெண் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளார், ஜகான் ஒரு கைகூலி என குற்றம் சாட்டப்படுகிறது. இத்திருமணத்தை எதிர்த்து அசேகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இந்த திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன.
இதில் லவ் ஜிகாத் சதி இருக்குமே என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது. இதனையடுத்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. வழக்கு தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், புதிய திருப்பமாக அக்டோபர் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஆகஸ்ட் 16-ம் தேதி உத்தரவை கேள்விக்குட்படுத்தியது.
ஹாதியா - ஜகான் இடையே நடந்த மத இணைப்பு திருமணத்தை தடை செய்ய கேரள ஐகோர்ட்டு அதிகாரம் இல்லை என்றது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீபக் மிஸ்ரா. மேலும் பெண்ணை அவரது தந்தை கடந்த பலமாதங்களாக தன் பிடியில் வைத்திருப்பதையும் சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது. லவ் ஜிகாத் வழக்கில் தொடர்புடைய ஹாதியாவை நவம்பர் 27 ம் தேதி நேரில் ஆஜர்படுத்த பெண்ணின் தந்தைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ஹாதியா வீட்டில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
மே மாதம் திருமணத்தை ஐகோர்ட்டு ரத்து செய்த பின்னர் கோட்டயத்தில் உள்ள ஹாதியாவின் வீட்டில் அவரை மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா சந்தித்து பேசினார். ஹாதியாவை சந்தித்த ரேகா சர்மா பேசுகையில், ஹாதியா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார், அவருடைய தந்தை மற்றும் உறவினர்களால் துன்புறுத்தப்படுகிறார் என குற்றச்சாட்டுக்களை மறுத்தார். ஹாதியா சிரித்துக் கொண்டு பேசிய புகைப்படத்தை காட்டி பேசிய ரேகா சர்மா, ஹாதியா மிகவும் நலமுடன் உள்ளார். யாரும் அவரை அடிக்கவில்லை. எதையும் சுப்ரீம் கோர்ட்டு முன்னால் சொல்வதாக ஹாதியா என்னிடம் கூறிஉள்ளார், என்றார்.
எந்தஒரு உரிமையும் மீறப்படவில்லை. ஹாதியா அவருடைய வீட்டில் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளார். மிகவும் சுதந்திரமாகவே செயல்படுகிறார். கோர்ட்டு முன்னதாக பேச மிகவும் ஆர்வமாக உள்ளார். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அதுகுறித்து நாங்கள் பேசவில்லை என்ற ரேகா சர்மா, ஹாதியா லவ் ஜிகாத்தில் பாதிக்கப்பட்டவரா? கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டாரா? என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்தார், இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்பதாக கூறிவிட்டார்.