லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி தான் அமையப்போகிறது என பகவான் கிருஷ்ணர் தனது கனவில் தினமும் வந்து கூறுவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
பகவான் கிருஷ்ணர் தினமும் என் கனவில் வந்து எனது தலைமையிலான ஆட்சியில் தான் உத்தரப்பிரதேசத்தில் ராம ராஜ்ஜியம் அமையப்போகிறது என கூறுகிறார்.
ராமராஜ்ஜியத்தை அமைப்பதற்கான வழி சோசியலிசம் தான். அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நிலை வரும்போதே ராம ராஜ்ஜியம் அமையும். கிருஷ்ணர், யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் நமது மாநிலத்தை தோல்வி அடைய வைத்துவிட்டதாக கூறுகிறார்.
சமாஜ்வாதி கட்சி அதிக குற்றங்களை செய்துள்ளதாக பாஜக கூறுகிறது. ஆனால் உண்மையில் அதிக குற்ற வழக்குகளை வைத்திருக்கும் யோகி ஆதித்யநாத்தை தான் அக்கட்சி முதலமைச்சர் ஆக்கியுள்ளது.
தன் கட்சியில் உள்ள குற்றவாளிகளை சுத்தம் செய்வதற்கு பாஜக வாஷிங் மெஷினை கொண்டு வர வேண்டும். பாஜகவில் பல்வேறு தலைவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்தனர். ஆனால் எங்கிருந்தோ வந்த யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆகிவிட்டார்.
யோகி ஆதித்யநாத் பொய் வாக்குறுதிகளை கொடுத்துக்கொண்டிருக்கிறார். மாநிலத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்களை யோகி ஆதித்யநாத் மாற்றிவிட்டார். இவரிடம் இருந்து கற்றுக்கொண்ட சீனா நம் நாட்டில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பல கிராமங்களின் பெயர்களை மாற்றியுள்ளது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.