தேசிய செய்திகள்

காதல் விவகாரம்: மருத்துவ மாணவி ஆணவ கொலை..!

காதல் விவகாரத்தில் மருத்துவ மாணவியை ஆணவ கொலை செய்து உடலை எரித்த தந்தை, அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தை சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (வயது22). 3-ம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவம் (பி.எச்.எம்.எஸ்.) படித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர்.

மாணவி வேறு நபரை காதலித்து உள்ளார். எனவே பெற்றோர் பார்த்து இருந்த மாப்பிள்ளையிடம் வேறு நபரை காதலிப்பது குறித்து மாணவி கூறினார். இதனால் மாணவிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றது. திருமணம் நின்றதால் மாணவி மீது அவரது குடும்பத்தினருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

இந்தநிலையில் மாணவி திடீரென மாயமானார். சந்தேகமடைந்த சிலர் மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மாணவியின் குடும்பத்தாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. காதல் விவகாரத்தில் சிக்கி திருமணம் நின்று போனதால் மாணவியின் மீது அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். கடந்த மாதம் 22-ந்தேதி இரவு மாணவியை அவரது தந்தை ஜனார்தன், அண்ணன் கேசவ், மாமா கிரிதர் உள்ளிட்டவர்கள் வயலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மாணவியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் உடலை எரித்து அங்கு இருந்த கால்வாயில் சாம்பலை கரைத்தது விசாரணையில் தெரிவந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த லிம்காவ் போலீசார் மாணவியின் தந்தை, அண்ணன், மாமா மற்றும் குடும்பத்தினர் கிருஷ்ணா, கோவிந்த் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

காதல் விவகாரத்தில் மாணவி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்