தேசிய செய்திகள்

விடுதலை புலிகள் தடை விவகாரம்; பெண் நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைப்பு

விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை சரியா என உறுதி செய்ய பெண் நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட விதிமுறைகளின் கீழ், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கம் என்று இந்திய அரசு தடை விதித்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்ற இந்த பிரகடனம், 2019-ம் ஆண்டு மே 14-ந் தேதியில் இருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் இதுபோன்ற பிரிவினை நடவடிக்கைகளை எல்லா வகையிலும் கட்டுப்படுத்துவது அவசியம் என்று இந்திய அரசு கருதுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வன்முறை மற்றும் சீர்குலைவு செயல்பாடுகள், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கக்கூடியவை. அந்த இயக்கம் கடுமையான இந்திய எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. இந்திய மக்களின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

வெளிநாட்டுவாழ் இலங்கை தமிழர்கள், இணையதள கட்டுரைகள் மூலமாக இலங்கை தமிழர்களிடையே இந்திய எதிர்ப்பு உணர்வை பரப்பி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்திய அரசே காரணம் என்று அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். இணையதளங்களில் நீடித்து வரும் இத்தகைய பிரசாரம், இந்தியாவில் மிகமிக முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் ஈழம் என்ற கொள்கையை கைவிடவில்லை. நிதி திரட்டுதல் மற்றும் பிரசார பணிகள் மூலம் ஈழம் கொள்கைக்காக ரகசியமாக பணியாற்றி வருகிறது.

விடுதலைப்புலிகளின் மிச்சம், மீதி இருக்கும் தலைவர்களும், இயக்கத்தினரும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் போராளிகளை ஒன்றுதிரட்டி, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிரூட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை சரியா என உறுதி செய்ய பெண் நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறார். இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்து உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்