தேசிய செய்திகள்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வைசாக்கை வற்புறுத்தியதாக தெரிகிறது.

Lingavel Murugan M

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைசாக் (வயது 35). இவர் தனது உறவினரான கோழிக்கோட்டை சேர்ந்த இளம்பெண்ணுடன் சிறு வயது முதலே பழகி வந்தார். பின்னர் 2 பேரும் காதலித்தும் வந்தனர். இதற்கிடையே வைசாக், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், வைசாக்கும், உறவினரான இளம்பெண்ணும் நெருங்கி பழகி வந்தனர்.

இதற்கிடையே அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வைசாக்கை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால், அதற்கு வைசாக் மறுப்பு தெரிவித்தார். இதனால் 2 பேரும் மனமுடைந்த நிலையில் பேசி வந்தனர். இதையடுத்து இனி உயிர் வாழ விரும்பவில்லை என இளம்பெண் வைசாக்கிடம் கூறியதை அடுத்து, தானும் உயிர் வாழ விரும்பவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

பின்னர் இளம்பெண்ணை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதன்படி, கடந்த 24-ந் தேதி கக்கோடி பகுதிக்கு வரவழைத்து, 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என வைசாக் கூறினார். இதை நம்பிய இளம்பெண், அவருடன் சேர்ந்து தற்கொலை செய்ய 2 கயிறுகளை தொங்க விட்டு, இருக்கைகளில் ஏறி நின்றனர். அப்போது திடீரென வைசாக் கீழே இறங்கியதோடு, இளம்பெண் நின்றிருந்த இருக்கையை காலால் தட்டி விட்டு, அவரை தூக்கில் தொங்க விட்டார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து வைசாக் தனது மனைவியை அழைத்து, அந்த இளம்பெண் தற்கொலை செய்து விட்டதாக கூறினார். பின்னர் 2 பேரும் இளம்பெண்ணை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஏலத்தூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் வைசாக்கை பிடித்து விசாரித்தனர். அதோடு கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்ததாக வைசாக் நாடகம் ஆடியதும், இறந்த பின்னர் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வைசாக்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்