பனாஜி,
கோவா மாநிலம் வடக்கு கோவா பகுதியை சேர்ந்தவர் துக்காராம் (வயது 46) கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி தான்வி (44) நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். அவருக்கு அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டியது இருந்தது. அதற்கு துக்காராமிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, நர்விம் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் அருகில் அவரது மனைவியை உயிருடன் புதைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துக்காராமை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நீர்ப்பாசன கால்வாயின் அருகில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் தான்வியை அவர் உயிருடன் புதைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தான்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.