புதுடெல்லி,
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறை ஏற்பட்டதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் குழு கண்காணிப்பில் மன்மோகன் சிங் இருந்து வந்தார்.
இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். முன்னதாக மன்மோகன் சிங் தனது இரண்டு தடுப்பூசி டோஸ் கோவாக்சினைப் பெற்றிருந்தார். அதில் முதலாவது டோஸ் மார்ச் 4ம் தேதி மற்றும் இரண்டாவது டோஸ் ஏப்ரல் 3ம் தேதி அன்று அவருக்கு செலுத்தப்பட்டது.
மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் 5 முக்கிய அம்சங்களை வலியுறுத்தியிருந்தார். தடுப்பூசி போடுதலை விரைவுப்படுத்த வேண்டும், தடுப்பூசி போடும் வயதை குறைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை வழங்கியிருந்தார். மேலும் கொரோனா வைரசின் கடுமையான இரண்டாவது அலைகளின் ஆபத்தான பிடியில் இந்தியா உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.