புதுடெல்லி,
இந்திய கார் விற்பனை சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மாருதி சுசூகி, புதிய ஸ்விப்ட், டிசைர் மாடல் கார்களில் ஏர் பேக் கோளாறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எனவே, இவற்றை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம், கொடுத்து இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிகழாண்டு மே 7 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆகிய காலகட்டத்திற்குள் தயாரிக்கப்பட்ட டிசைர் மற்றும் புதிய ஸ்விப்ட் மாடலின் 1,279 வாகனங்களை (566 புதிய ஸ்விப்ட், 713 புதிய டிசைர்) திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். இந்த கார்களின் உரிமையாளர்கள் மாருதி ஏஜெண்டுகளிடம் சென்று தங்கள் கார்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கட்டணமின்றி சரி செய்து கொள்ளலாம்.
தங்கள் வாகனங்களில் இந்த பாதிப்பு உள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் மாருதி நிறுவன இணையதளத்திற்கு சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம். உலகளாவிய அளவில் விற்பனை செய்த கார்களில் பழுது இருப்பது உறுதியானால் அதனை கட்டணமின்றி சரி செய்து கொடுக்கும் நடைமுறை உள்ளது.அதனை வாகனங்களை திரும்பப் பெற்று சரி செய்து கொடுக்கிறாம் என மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.