தேசிய செய்திகள்

டொமினிகாவில் தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மெகுல் சோக்சி

பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி டொமினிகா நாட்டின் தனிமைப்படுத்தும் மையத்தில் வைக்கப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி வரை கடன் பெற்று, தலைமறைவானார்கள். இதுபற்றி, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர்.

அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், நிரவ் மோடி லண்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளார். கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே தஞ்சம் அடைந்துள்ளார்.

சோக்சிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சிறப்பு கோர்ட்டு பிறப்பித்தது. மெகுல் சோக்சி மீது சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆன்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை என கடந்த 23ந்தேதி தகவல் வெளியானது. இதனை அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமரான காஸ்டன் பிரவுனி கடந்த செவ்வாய் கிழமை கூறும்பொழுது, சோக்சிக்கு எதிராக இரு வழக்குகள் உள்ளன. அவர், நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கான நம்பத்தகுந்த தகவல் எதுவும் எங்களிடம் இல்லை.

அவர் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் இன்னும் வசித்து வரலாம். போலீசார் அவரை கண்டறிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் என கூறினார்.

இந்த நிலையில், டோமினிகா நாட்டில் சோக்சி இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி சோக்சியின் வழக்கறிஞரான விஜய் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சோக்சியின் உடலில் அவரை கொடுமைப்படுத்தியதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

அவரை ஆன்டிகுவா நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை டோமினிகா நாட்டில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என கூறினார். சோக்சியை கட்டாயப்படுத்தி ஆன்டிகுவாவின் ஜாலி துறைமுகத்தில் இருந்து பல்வேறு நபர்கள் அவரை அழைத்து கொண்டு டோமினிகாவுக்கு சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மெகுல் சோக்சி, டோமினிகா நாட்டில் போலீஸ் காவலில் சிறையில் உள்ள புகைப்படங்கள் நேற்று வெளிவந்தன. அதில் அவர், ஆள் அடையாளம் தெரியாத வகையில் மெலிந்த தேகத்துடன் காணப்படுகிறார். மற்றொரு புகைப்படத்தில் அவரது வழக்கறிஞர் கூறியதுபோல் சோக்சியின் வலது மற்றும் இடது கைகளில் காயம் ஏற்பட்டதற்கான தழும்புகளும் காணப்படுகின்றன. அவரது இடது கண் வீங்கி, ரத்த சிவப்புடன் காணப்பட்டது.

இந்த சூழலில், மெகுல் சோக்சி மிக பெரிய குற்றம் செய்துள்ளார் எனவும் இந்திய குடிமகனான அவரை திரும்ப ஒப்படைக்கும்படியும் டொமினிகா அரசிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

இதற்காக, டொமினிக் அரசை இந்திய தூதரகம் வழியே தொடர்பு கொண்ட மத்திய அரசு, இன்டெர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட மெகுல் சோக்சி, இந்திய குடிமகனாக எங்களுடைய நாட்டில் இருந்து தப்பி சென்ற நபராகவே நடத்தப்பட வேண்டும்.

அவரை நாடு கடத்தி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். நாட்டு மக்களின் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டதில் அவருடைய உண்மையான பங்கு பற்றி இந்திய சட்டத்திற்கு முன் அவர் பதிலளிக்க வேண்டும்.

அவர் இந்திய பிரஜை இல்லை என மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தனது குற்றங்களை மறைப்பதற்காக வேறு நாட்டு குடிமகன் போல் தன்னை முன்னிறுத்துகிறார் என்று தெரிவித்திருந்தது.

சோக்சியை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி டொமினிகா அரசை ஆன்டிகுவா அரசும் வலியுறுத்தியது. எனினும், இதற்கு டொமினிகா அரசு ஒத்துழைப்பு வழங்காத நிலையில், நாடு கடத்துவது பற்றி நாளை மறுநாள் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சோக்சிக்கு கொரோனா பரிசோதனை நடத்த கிழக்கு கரீபியன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் டொமினிகா நாட்டு அரசின் தனிமைப்படுத்தும் மையத்திற்கு சோக்சி கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு