புதுடெல்லி,
சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக 2-வது முறையாக அண்மையில் கே.பி.சர்மா ஒலி தேர்வு செய்யப்பட்டார். அவர் 3 நாள் அரசு முறைப்பயணமாக மனைவி ராதிகா ஷாக்யாவுடன் நேற்றுமுன்தினம் இந்தியா வந்தார். அவர்களுக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதைத்தொடர்ந்து சர்மா ஒலி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளின் உறவை இன்னும் மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
ராணுவம், இணைப்பு வழி திட்டங்கள், வர்த்தகம், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், குறிப்பாக நேபாள தலைநகர் காட்மாண்டுவை இந்தியாவுடன் இணைத்திடும் வகையில் புதிய ரெயில்பாதை அமைப்பதற்கு இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்பு பிரதமர் மோடி கூறுகையில், நேபாளம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணும் வேட்கை கொண்டு உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையிலும், அந்நாட்டின் ஜனநாயகத்தை மேம்படுத்திடவும், தனது அண்டை நாடான நேபாளத்துடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றார்.
சர்மா ஒலி கூறும்போது, நேபாளம்-இந்தியா இடையேயான உறவை 21-ம் நூற்றாண்டில் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் இங்கு வந்துள்ளேன். இரு நாடுகளும் நம்பிக்கையின் அடிப்படையில் வலுவான நட்பு மாளிகையை கட்டமைக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின்போது, மோடியை நேபாளத்துக்கு வருமாறும் சர்மா ஒலி அழைப்பு விடுத்தார்.
முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூம், சர்மா ஒலியை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.