புதுடெல்லி,
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங்(வயது 32), பவன் குப்தா(25), வினய் குமார் சர்மா(26), அக்ஷய் குமார்(31) ஆகிய குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.
இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிடக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 5-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆர்.பானுமதி மயங்கி விழுந்ததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தூக்கில் போட டெல்லி கோர்ட்டு கடந்த 17-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கில் போட கோரிய மனு நேற்று நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் ஆஜராகி, குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது நீதிபதிகள் இந்த மனுவை மார்ச் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.