லக்னோ,
லக்னோவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, உத்தர பிரதேச அரசை கடுமையாக சாடினார். பிரியங்கா காந்தி தனது பேட்டியின் போது கூறியதாவது; - என்னுடைய பாதுகாப்பு என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல. அதுகுறித்து நான் ஆலோசிக்கவில்லை.
பொதுமக்களின் பாதுகாப்பு தான் உத்தர பிரதேசத்தில் பிரச்சினையாக உள்ளது. காவி நிறம் என்பது இந்துமதத்தைக் குறிக்கிறது. அது வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் துணை போகக்கூடாது. தேசத்தில் பழிவாங்குதலுக்கும், வன்முறைக்கும் இடம் இல்லை.
மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று அறியமுடியாமல் மக்கள் கவலைப்படுகிறார்கள். இதுபோன்று மாநில அரசு செய்வது அராஜகம். யாருக்கும் வேலையில்லை, வேலையின்மை நிலவுகிறது. பெண்கள் பாதுகாப்பற்ற சூழலாக உணர்கிறார்கள்.
இதைக்காட்டிலும் பெரிய பிரச்சினைகள் இருக்கும் போது அற்பமான விஷயங்களை அரசு எழுப்புகிறது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.