வேகமாக பரவும் கொரோனா
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் கூட நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரேநாளில் 16 ஆயிரத்தை கடந்தது.
இதற்கிடையே நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாவட்டங்களில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பரவல் அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. அதிகரித்துவரும் கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வாக இருக்காது. ஊரடங்கை அறிவிப்பதில் மாநில அரசுக்கு விருப்பம் இல்லை. ஆனால் இனி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.
புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் அற்றவர்கள். எனவே அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுத்தப்பட்டு உள்ளனர்.
நோய் பாதித்தவர்களை கண்டுபிடித்தல், சோதனை செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் முறையை அரசு பின்பற்றி வருகிறது. எனவே தினமும் பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த சமூக கூட்டங்கள் மற்றும் திருமணங்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் நோயை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
தனிநபர் இடைவெளியை உறுதி செய்தல் மூலமும், முககவசத்தை அணிவதன் மூலமும், தவறாமல் கைகளை கழுவுவதன் மூலமும் மக்கள் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். புதிய ஊரடங்கு வராமல் தவிர்க்க விதிகளை பின்பற்றுங்கள்.
மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.
மராட்டியத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை. விரைவில் அனைத்து முத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.