புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நேற்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் பணியாற்றும் நர்சுகளுக்கு சிறந்த ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்-மந்திரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தனியார் நிறுவனங்களை இனியும் ஒழுங்குபடுத்தாமல் இருக்க முடியாது. இந்த துறையை ஒழுங்குபடுத்துவதற்காக தேவைப்பட்டால் மாநில அரசுகள் சட்டமும் இயற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப தங்கள் சம்பளம் மற்றும் படிகளை மாற்றியமைக்க வேண்டும் என அனைத்து இந்திய அரசு நர்சுகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து இருப்பதாக கூறிய ஜே.பி.நட்டா, அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஆய்வு செய்திருப்பதாக கூறினார். குறைந்தபட்ச சம்பளம் போன்ற சில காரணிகளில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.