புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2-வது கட்டக் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஓராண்டிற்குள் நேரடி சுங்கச்சாவடிகள் முழுவதும் அகற்றப்பட்டு, ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய மந்திரி நிதின்கட்கரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்து சுங்கச்சாவடிகளையும் ரத்து செய்யும் திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. 93 சதவீத வாகனங்கள் பாஸ்டேக்கை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 7 சதவீத வாகனங்கள்தான் இரட்டை கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
முந்தைய அரசும், நகரத்திற்கு அருகில் சுங்கச்சாவடிகள் அமைத்தன. இது சட்ட விரோதமானது. ஒரு வருடத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து சுங்கக் கட்டணச் சாவடிகளும் அகற்றப்படும் என்று நான் சபைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். அதாவது சுங்கச்சாவடிகளில் நேரடியாக கட்டணம் வசூலிக்கும் முறை ஓராண்டுக்குள் நீக்கப்படும். ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இதை பயன்படுத்துவதன்மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்ல வழிவகுக்கும்.
சாலையின் நுழைவு பகுதி மற்றும் வெளியேறும் இடங்களில் கேமராக்கள் இருக்கும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாலையில் நுழைந்ததும், வெளியேறும் இடத்திலும், இரு இடங்களிலும் உங்கள் படம் கேமராவுடன் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பிறகு யாரும் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டியதில்லை. புதிய வாகனங்களில் பாஸ்டேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பழைய வாகனங்களுக்கு இலவச பாஸ்டேக்குகளை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது என்று நிதின்கட்கரி கூறினார்.