மும்பை,
288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைப்பதற்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சி இப்போதே வரிந்து கட்டத்தயாராகி விட்டது.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநிலம் முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு பொதுமக்களை சந்திப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரைக்காக ரதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள வாகனத்தை மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மும்பையில் நேற்று அறிமுகம் செய்தார்.
இதற்காக 2 வாகனங்களை பாரதீய ஜனதா கட்சி வழங்கி உள்ளது. ஒன்று, கட்சியின் தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச மாநிலத்தில் பயன்படுத்தியதாகும். மற்றொன்று, மத்திய பிரதேச மாநிலத்தில், அதன் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் பயன்படுத்தியதாகும். ஏற்கனவே நாங்கள் வெற்றிகரமாக பயன்படுத்திய வாகனங்களை மராட்டிய சட்டசபை தேர்தலிலும் பயன்படுத்துவோம் என்று சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.
ஆகஸ்டு 1-ந் தேதி (நாளை) தனது ரத யாத்திரையை அமராவதியில் உள்ள மொசாரியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்குகிறார். ஆகஸ்டு 31-ந் தேதி நிறைவு செய்கிறார்.