எல்மாவ்
ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்று இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இன்று மாநாடு நடைபெறும் எல்மாவ் நகரம் சென்ற பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். இதன்பிறகு ஜி 7 நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
கடந்த மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற குவாட் மாநாட்டிற்குப் பிறகு பிரதமர் மோடியும் ஜோ பைடனும் சந்தித்துத்துக்கொள்வது இதுவே முதல் முறையாகும். வரும் ஜூலை மாதம் காணொலி வாயிலாக I2u2 -உச்சி மாநாட்டிலும் இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர். I2u2- காணொலி உச்சி மாநாட்டில் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கின்றன.