புதுடெல்லி,
இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் 20 பேரது பதவியை பறிக்க கோரிய தேர்தல் கமிஷன் சிபாரிசுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். தேர்தல் கமிஷன் பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று அறிவிப்பு வெளியானதால் 20 இடங்களுக்கு இடைத்தேர்தல் வரும். 20 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டாலும், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. அதன் பலம் மட்டும்தான் 46 ஆக குறையும். ஏற்கனவே தேர்தல் கமிஷனின் முடிவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக நாளையும் விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடக்கிறது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யவும் ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.
20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது அரசியலமைப்புக்கு விரோதமானது மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என ஆம் ஆத்மி விமர்சனம் செய்து உள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மதன்லால் பேசுகையில், அனைவருக்கும் நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளது. நாளை நிவர்த்தி கிடைக்கும் என கட்சி நம்புகிறது என குறிப்பிட்டு உள்ளார். தகுதி நீக்கம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் அசுதோஸ் பேசுகையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி விடுத்த உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது, என கூறிஉள்ளார். மற்றொரு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. அல்கா லம்பா பேசுகையில், ஜனாதிபதியின் முடிவு வேதனைக்குரியது, இறுதி முடிக்கு வருவதற்கு முன்னதாக எங்கள் தரப்பிலும் பேசியிருக்க வேண்டும், என குறிப்பிட்டு உள்ளார்.