அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பால் பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது. அதில், குரு ரவிதாஸின் பிறந்தநாள் பிப்ரவரி 16ம் தேதி வருகிறது. மாநிலத்தின் 32 சதவீத மக்கள் தொகை கொண்ட பட்டியல் சாதியைச் சேர்ந்த சில பிரதிநிதிகள் பிப்ரவரி 10 முதல் 16 வரை உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரசுக்கு செல்வார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியாது. வாக்களிப்பது அவர்களின் அரசியலமைப்பு உரிமை. அவர்களும் சட்டசபைத் தேர்தலில் பங்கேற்பதற்காக தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.