புதுடெல்லி,
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி நோக்கி இன்று காலை டிராக்டரிலும் மற்றும் நடந்தும் பேரணியாக புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, டெல்லி மற்றும் அரியானா எல்லை பகுதியான சிங்கு எல்லை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய போலீசாருடன், ஆளில்லா விமானம் வழியேயும் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
போராட்டத்தில் வன்முறை பரவிவிடாமல் தடுப்பதற்காக கலகக்காகரர்களை கலைந்து போக செய்யும் வகையில் டெல்லி போலீசாரின் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் அந்த வழியே போகும் வாகனங்களை கண்காணித்து அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், அரியானாவின் அம்பாலா பகுதியருகே சம்பு எல்லை பகுதியில் திரண்டு வந்த விவசாயிகளை கலைந்து போக செய்வதற்காக போலீசார் கேட்டு கொண்டனர். ஆனால், அவர்கள் செல்லவில்லை. அதற்கு பதிலாக போலீசார் தடுப்புக்காக போட்டிருந்த தடுப்பான்களை பாலத்தில் இருந்து தூக்கி கீழே போட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மீது நீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. சிலர் கொடிகளை ஏந்தியபடி முன்னேற முயன்றனர். ஆனால், போலீசார் தொடர்ந்து நீரை பாய்ச்சி அடித்தனர். இதனால், போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் அலைந்தனர்.
இதேபோன்று டெல்லி செல்லும் வழியில் கர்னால் என்ற இடத்தில் விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் அந்த பகுதி வழியே டிராக்டரில் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை செல்ல விடாமல் சாலையில் தடுப்பான்கள் போடப்பட்டு மறிக்கப்பட்டனர். இதனால் பொதுமக்களும், அந்த வழியே செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். எனினும், தொடர்ந்து நாங்கள் முன்னேறி செல்வோம் என போராட்டக்காரர் ஒருவர் கூறினார்.