2021-22-ம் ஆண்டு பட்ஜெட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது.
நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது
இந்நிலையில், மத்திய ராஜாங்க நிதி மந்திரி அனுராக்சிங் தாக்குர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருத்தப்பட்ட மதிப்பீட்டு நிலையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியைக் குறைத்த காங்கிரசை போல் அல்லாது, பா.ஜ.க. அரசு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்.
உதாரணமாக, 2019-20 பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மதிப்பீடு ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் கூடுதல் நிதி தேவை ஏற்பட்டதால் அது ரூ.71 ஆயிரத்து 1 கோடியாக அதிகரிக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டிலும், கொரோனா தொற்று காரணமாக வேலைவாய்ப்பை இழந்த கிராமப்புற மக்களை கருத்தில்கொண்டு இந்த திட்டத்துக்கான நிதி ரூ.61 ஆயிரத்து 500 கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடியாக வெகுவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு முக்கியம்
கொரோனா ஊரடங்கின்போது, கிராமப்புற பகுதிகளில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.
தற்போது ஊரடங்கு முடிந்துவரும் நிலையில், வேலைவாய்ப்புக்கான தேவை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப நாங்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை அதிகரிப்போம்.
பொருளாதாரத்தை காப்பாற்றினோம்
ஏழை மக்களைக் காப்பாற்ற, கொரோனா தொற்றுக்கு எதிரான அரசின் செலவை அதிகரிக்க வேண்டும் என்று பல பொருளாதார அறிஞர்களும், நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். மாறாக, வேலைவாய்ப்பு குறையாமல் இருக்க தொழில்துறைக்கு அதிக உதவி அளிக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது நிதி பற்றாக்குறை சற்று கூடுதலாக தோன்றலாம். ஆனால் பொருளாதாரம் மீண்டும் வலுவாக மீட்சி அடைவதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. நாங்கள் மக்களின் வாழ்வைக் காப்பாற்றியதுடன், பொருளாதாரத்தையும் காப்பாற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.