தேசிய செய்திகள்

பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு

பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். பிரபல ஆங்கில டி.வி. சேனலான ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால், இந்த இரட்டை தற்கொலை நடந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக அன்வய் நாயக்கின் மகள் அளித்த புகாரின்பேரில், கடந்த புதன்கிழமை அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அலிபாக் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். அப்போது அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் நேற்று அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர் அதுவும் மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது எப்.ஐ.ஆர் நிலுவையில் இருக்கும்போது ஜாமீன் வழங்கப்படாவிட்டால் அது நீதிக்கான கேலிக்கூத்தாக இருக்கும், மராட்டிய அரசு சார்பில் வாதிட்ட கபில் சிபலிடம் நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.

மேலும் கோஸ்வாமியின் வழக்குக்கு காவல் விசாரணை தேவையா என்று மராட்டிய மாநில அரசை கேட்டதுடன், நாங்கள் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பான பிரச்சினையை கையாள்கிறோம் என்றும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரம் குறைக்கப்பட்டால் அது நீதிக்கான கேலிக்கூத்தாக இருக்கும் என்றும் கூறினார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்