ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் அத்துமீறி பாகிஸ்தான் நாட்டு டிரோன் ஒன்று ஆயுதங்களை வீசி சென்றுள்ளது. இதனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதுபற்றி விசாரணையும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பி.எஸ்.எப். படையினர் கூறும்பொழுது, கடந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து தோண்டப்பட்ட சுரங்கம் ஒன்று இந்த பகுதியில் கண்டறியப்பட்டது.
இதேபோன்று, இந்த ஆண்டில் கடந்த 5ந்தேதி பாகிஸ்தானில் இருந்து நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற ஊடுருவல்காரர் இதே பகுதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த சூழலில், இந்த பகுதியில் பாகிஸ்தானிய டிரோன் ஆயுதங்களை வீசி சென்றுள்ளது. அவற்றில் ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்று, 9 மி.மீ. அளவுள்ள கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் உள்ளிட்டவை இருந்தன என தெரிவித்து உள்ளனர்.