தேசிய செய்திகள்

14 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி

காஷ்மீர் மாநிலத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு போர் விமானங்கள் சாகச காட்சி நடைபெற்றது. அவற்றை பார்த்து பொதுமக்கள் பரவசம் அடைந்தனர்.

தினத்தந்தி

14 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஷோ

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், கோடை கால தலைநகரான ஸ்ரீநகரில் 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக போர் விமானங்களின் வீர சாகச கண்காட்சி (ஏர் ஷோ) நடைபெற்றது. நாடு 75-வது சுதந்திர தின ஆண்டில் அடியெடுத்து வைத்து, அமிர்த மகோத்சவத்தை கொண்டாடுகிற இந்த தருணத்தையொட்டி, இதற்கான ஏற்பாட்டை விமானப்படையும், அரசும் செய்திருந்தன. இந்த வீர சாகச காட்சிகளை இந்திய விமானப்படையின் ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் மற்றும் சூரிய கிரண் ஏரோபாட்டிக் டிஸ்பிளே அணிகள் செய்து காட்டின.

விழிப்புணர்வுதான் நோக்கம்...

இந்த ஏர் ஷோ பற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்த ஏர் ஷோவின் முக்கிய நோக்கம், உங்கள் கனவுக்கு சிறகுகள் கொடுங்கள் என்பதுதான். அதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இளைஞர்களை விமானப்படையில் சேருவதற்கும், பிராந்தியத்தில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என்று குறிப்பிட்டனர்.அந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த வீர சாகச காட்சிகளைக் காண்பதற்கு ஷெர் இ காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் கூடி இருந்தனர். இப்படி ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.

சல்யூட் அடிப்பது போன்று வந்த போர் விமானங்கள்

இந்த ஏர் ஷோவில் முதலில் இந்திய விமானப்படையின் பழமையான மிக்-21 ரக போர் விமானங்கள் புகழ்பெற்றதால் ஏரிக்கு மேலே பறந்தபோது பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.வானில் கர்ஜித்தவாறு 4 மிக்-21 ரக போர் விமானங்கள் பறந்து, மேடை பக்கமாக திரும்பி சல்யூட் அடிப்பதுபோன்று சென்றபோது, பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடுவானில் குதித்த வீரர்கள்

அதைத் தொடர்ந்து ஆகாஷ் கங்கா ஸ்கைடைவிங் அணியினர், நடுவானில் போர் விமானங்களில் இருந்து குதித்து மயிர் கூச்செறியச்செய்தனர். அப்தாப் கான் தலைமையிலான அணியினர் மைதானத்தை நோக்கி விமானங்களை 120 கி.மீ. வேகத்தில் கொண்டு வந்தபோது அது பரபரப்பை ஏற்படுத்தியது.சுகோய் சு-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள், விண்ணில் பறந்து திரிசூல வடிவமைப்பை செய்து காட்டி கர்ஜித்தபோதும், தால் ஏரியின் மேலே கவிழ்வதுபோல சுழன்றதையும் கண்டு மக்கள் பரவசப்பட்டனர்.

நடனமாடிய விமானங்கள்

மேலும் வானில் நடனமாடுவதுபோல போர் விமானங்கள் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.சூரியகிரண் ஏரோபாட்டிக் டிஸ்பிளே அணியினர் 9 விமானங்களில் 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக வீரசாகச காட்சிகளை நடத்திக்காட்டி, வானத்தில் சிவப்பு, வெள்ளை நிறப்பொடிகளை பரப்பினர். இதே போன்று தரையில் இருந்து 30 மீட்டர் உயரத்தில் போர் விமானங்கள் தாழப்பறந்து பல்வேறு சாகச காட்சிகளை நடத்திக்காட்டியபோதும் பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

மேலும் ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையில் பார்வையாளர்கள் அருகே வந்து மேடையை நோக்கி சல்யூட் செய்வது போன்று நடத்திய காட்டியது அசத்தலாக இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இந்த விமானங்களின் வீர சாகச காட்சியையொட்டி ஸ்ரீநகரில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்