புதுடெல்லி,
உயர் கல்வி நிறுவனங்களில் 'சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026' யுஜிசி அண்மையில் வெளியிட்டது. அதில் உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய அடிப்படையிலான பாகுபாடு என்பதற்கு, எஸ்சி., எஸ்டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிரான பாகுபாடு என்பதாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்த சூழலில் சாதிய பாகுபாட்டை இடஒதுக்கீடு பிரிவினருக்கானதாக மட்டும் சுருக்குவது, பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அல்லாத மாணவர்கள் சந்தித்து வரும் பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் மற்றும் சாதி அடையாளம் அடிப்படையிலான பாகுபாடுகளில் பாதுகாப்பதிலிருந்து வெளிப்படையாக தவறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சாதிய பாகுபாடுகளை களையும் வகையில் யுஜிசி கொண்டுவந்த புதிய வழிமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதுகாப்பு வழங்கும் 2012 விதிமுறையை இடைக்காலமாக மீண்டும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நிபுணர்கள் அமைத்து ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனை வழங்கி உள்ளது.