புதுடெல்லி,
மும்பையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வக்கீல் ஜெய சுகின் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், திருநங்கைகள் சமூக, கலாசார ரீதியாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றினாலும், பல்வேறு தளங்களில் அது போதுமானதாக இல்லை.
இதுபோன்ற பிரச்சினைகளைக் களையவும், திருநங்கைகளுக்கு எதிராக போலீசார் நிகழ்த்தும் வன்முறையைத் தடுக்கவும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், மனித உரிமை, சமூக உரிமை ஆர்வலர்கள் அடங்கிய நிலைக்குழுவை அமைக்கவும், திருநங்கைகள் நல வாரியத்தை ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெய சுகின் ஆஜராகி, திருநங்கைகளுக்கு தமிழகம், மராட்டியம், உத்தரபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல வாரியம் போல பிற மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்கக் கோரிய மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.