புதுடெல்லி,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ந்தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.
இந்தத் தொடர்பான வீடியோ காட்சிகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. ஆனால், பாகிஸ்தான் பகுதிக்குள் துணிச்சலுடன் சென்று நமது ராணுவ வீரர்கள் நடத்திய துல்லியத் தாக்குதல் குறித்து பாதுகாப்பு துறைஅமைச்சகமும், ராணுவத்துறையினரும் வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில், ஒன்றைரை ஆண்டுகளுக்குப் பின் அந்த துல்லியத் தாக்குதல் குறித்த வீடியோவை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. நமது வீரர்களின் உயிர்த்தியாகத்தை வாக்குகளாக மாற்றப் பயன்படுத்தாதீர்கள் எனக்கண்டித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:
மோடி அரசு ஜெய் ஜவான் ஜெய் கிஷன் என்ற முழக்கத்தை சுரண்டிக்கொண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் வாக்குகளை பெற முயற்சிக்கிறது.
நமது ராணுவ வீரர்களின் துணிச்சல் மிக்க வீரம், தியாகம் ஆகியவற்றை மத்தியில் ஆளும் மோடி அரசு தங்களின் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்தப்பார்க்கிறது. ராணுவத்தினரின் துணிச்சலை தெரிவித்து ஆதாயம் பெறும் பாஜக அரசு.
பாகிஸ்தானுடன் உள்ள பிரச்னையை தீர்க்க இயலாமல் திணறி வருகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் அரசியல் வெற்றிக்கு ராணுவ வெற்றியைப் பயன்படுத்தவில்லை. மோடி அரசு தோல்வி அடைந்த போது அவர்களின் அரசியல் நலனுக்காக இராணுவத்தின் வீரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.