தேசிய செய்திகள்

'தமிழகத்திற்கு குறைந்த முக்கியத்துவமே வழங்கப்படுகிறது' - மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு

ஜனவரி 27-ந்தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதியளித்தார் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழக மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மிகவும் முக்கியமான விவகாரத்தைப் பற்றி பேசுவதற்கு ஒருவழியாக எனக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பிரச்சினை குறித்து பேசும்போது, மூத்த மத்திய மந்திரிகள் யாரும் இங்கு இல்லை. பின் யாரிடம் நான் முறையிடுவது?

தமிழகத்திற்கு குறைந்த முக்கியத்துவமே வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதல்-அமைச்சரும், தமிழக எம்.பி.க்களும் ஏற்கனவே பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து வெள்ள நிவாரணம் தொடர்பாக மனு அளித்துள்ளோம். எங்களிடம் அவர்கள் நிச்சயம் தமிழகத்திற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தனர்.

நாங்கள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபோது, ஜனவரி 27-ந்தேதிக்குள் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். ஆனால் இன்று வரை மத்திய மந்திரியிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தமிழகத்திற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்குக் கூட மத்திய அரசு தயாராக இல்லை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இப்போதாவது மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்."

இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்